பணயக்கைதியை கொன்று விடுவோம்... கொரில்லா போராளிகள் விடுத்த எச்சரிக்கை
இந்தோனேசியாவிலிருந்து பப்புவா பகுதியை விடுவிக்க கோரும் கொரில்லா போராளிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விமானியை சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டல்
இந்தோனேசியாவின் பப்புவா பிராந்தியத்தில் உள்ள கிளர்ச்சியாளர்கள் பிப்ரவரி மாதம் முதல் தாங்கள் பணயக்கைதியாக வைத்திருக்கும் நியூசிலாந்து விமானியை சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டியுள்ளர்.
@reuters
தங்கள் கோரிக்கையான, பப்புவா பிராந்தியத்திற்கு சுதந்திரம் அளிக்கும் பேச்சுவார்த்தையை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் துவங்க மறுத்தால், பணயக்கைதியை கொல்வதை தவிர வேறு வழியில்லை என எச்சரித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் இருந்து பப்புவா பிராந்தியத்தை தனி நாடாக விடுவிக்க கோரி, அங்குள்ள கொரில்லா போராளிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் Nduga மலைப் பகுதியில் தரையிறங்கிய வணிக விமானத்தின் விமானி பிலிப் மெஹர்டென்ஸை கடந்த பிப்ரவரி மாதம் கொரில்லா போராளிகள் கடத்திச் சென்றனர்.
ஆனால் தற்போது, காணொளி ஒன்றை வெளியிட்ட கொரில்லா போராளிகள், தங்கள் கோரிக்கைகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் பணயக்கைதியை சுட்டுக் கொல்வோம் என அதில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தோனேசியாவைத் தவிர மற்ற நாடுகள் பாப்புவான் சுதந்திரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரிவினைவாதிகள் விரும்புவதாக அந்த காணொளியில் விமானி பிலிப் மெஹர்டென்ஸ் தெரிவித்துள்ளார்.
மெஹர்டென்ஸின் பாதுகாப்பான விடுதலை
இதனையடுத்து நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், தங்கள் நாட்டு விமானி தொடர்பில் பரவும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தாங்கள் அறிந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
@AP
மேலும், இந்த விவகாரத்தில் அமைதியான தீர்வு மற்றும் விமானி மெஹர்டென்ஸின் பாதுகாப்பான விடுதலை தொடர்பில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான உரிய நடவடிக்கைகளை ராணுவம் தொடர்ந்து முன்னெடுக்கும் என இந்தோனேசிய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.