நயாகரா அருவி சுற்றுலா பேருந்து விபத்து... சிறார் உட்பட பலர் மரணம்
நயாகரா அருவியில் சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், பயணிகள் ஜன்னல்கள் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டதில் ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து கவிழ்ந்தது
குறித்த விபத்தானது உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மேற்கு நியூயார்க்கில் நடந்துள்ளது. விபத்தில் சிக்கி கவிழ்ந்த பேருந்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற அவசர உதவிக் குழுவினர் விரைந்தனர்,
மேலும் சம்பவயிடத்திற்கு ஹெலிகொப்டர்கள் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெளியான தகவலின் அடிப்படையில், சாரதியின் கவனம் சிதறியதாகவும், ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தின் கட்டுப்பாடு இழந்ததாகக் கூறப்படுகிறது - இதனால் பேருந்து கவிழ்ந்தது.
நயாகரா அருவியிலிருந்து நியூயார்க் நகரத்திற்குப் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் உட்பட 54 பேர் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
பஃபலோவிற்கு அருகிலுள்ள பெம்ப்ரோக் நகரில் விபத்து நடந்துள்ளது. வாகனத்திற்குள் இருந்தவர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டனர். டசின் கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை
இதனிடையே, பலர் காயமடைந்ததாகவும், பலர் பேருந்தின் அடியில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
சாரதி காயங்களுடன் தப்பியதாகவும், பொலிசாருடன் ஒத்துழைத்து வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த குறைந்தது இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் ஹெலிகொப்டர் மூலம் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மரணமடைந்தவர்கள் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் பெரும்பாலான பயணிகள் இந்திய, சீன மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |