மூன்று மணி நேரம்... தோல்வியில் முடிந்த ட்ரம்ப் - புடின் சந்திப்பு: விரிவான பின்னணி
உக்ரைனில் போர்நிறுத்தம் தொடர்பான எந்த உடன்பாட்டையும் எட்டாமல் ட்ரம்பும் புடினும் அலாஸ்காவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த ஒப்பந்தமும் இல்லை
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பிறகு, ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தலைவர்கள் இருவரும் ஒரு கூட்டு அறிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
ஆனால் புடினுடனான பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மட்டும் ஜனாதிபதி ட்ரம்ப் பதிவு செய்துள்ளார். இருப்பினும் விரிவான விளக்கம் அளிக்க இருவரும் மறுத்துள்ளனர்.
மட்டுமின்றி, ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை எந்த ஒப்பந்தமும் இல்லை என வழக்கமான குழப்பும் கருத்தையே ட்ரம்ப் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான இராணுவ மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு போதுமான முன்னேற்பாடுகள் எதும் செய்யப்படவில்லை என்றே தகவல் கசிந்துள்ளது.
ஆனால் ட்ரம்புடனான இந்த மூன்று மணி நேர சந்திப்பு எந்த முடிவையும் எட்டாத நிலையில் அது புடினை பொறுத்தமட்டில் வெற்றி என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், புடினும் ஜெலென்ஸ்கியும் நேரிடையாக சந்தித்து முடிவுக்கு வர வேண்டும் என்றே ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
அந்த சந்திப்பானது யார் ஏற்பாடு செய்வார்கள் அல்லது அது எப்போது நடக்கக்கூடும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை ட்ரம்ப் தெரிவிக்கவில்லை. ஜெலென்ஸ்கியுடன் சந்திப்பு தொடர்பில் புடின் கருத்து கூற மறுத்துள்ளதுடன், உக்ரைனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக புடின் குறிப்பிட்டிருந்தார்.
மிரட்டி அவமானப்படுத்திய ட்ரம்ப்
இந்த நிலையில் தன்னை ஒரு சமாதானத் தூதராகவும், பேரம் பேசுபவராகவும் காட்டிக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது எதையும் சாதிக்காமல் அலாஸ்காவை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை நேரலையில் மிரட்டி அவமானப்படுத்திய ட்ரம்ப் தற்போது புடினிடம் சரணடைந்து திரும்புவதாகவே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
புடினுடனான சந்திப்பு தோல்வியில் முடிய 25 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது என குறிப்பிட்டிருந்த ட்ரம்ப் தற்போது 100 சதவீத தோல்வியுடன் திரும்புகிறார் என்றே கூறுகின்றனர்.
வெள்ளை மாளிகையில், தம்மை சந்திக்க வரும் வெளிநாட்டுத் தலைவர்களை சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அமைதியாக நின்றதன் வெளிப்படையான அவமானத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |