இந்தியா மட்டுமல்ல... ரஷ்யாவுடன் பல பில்லியன் டொலர் வர்த்தகம் செய்யும் வல்லரசு நாடுகள்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உட்பட குறிப்பிட்ட நாடுகளுக்கு 25 சதவீத வரியை ட்ரம்ப் நிர்வாகம் விதித்திருந்தது.
அமெரிக்காவின் பங்காளி
ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இன்னும் ரஷ்யாவுடன் பில்லியன் கணக்கான டொலர் வர்த்தகத்தைச் செய்து வருகின்றன. இந்த வரி உயர்வின் மூலம் இந்தியா நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாகவும், ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை நியாயமற்றது என்றும் வாதிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால் கடந்த ஆண்டு, ரஷ்யாவிலிருந்து 3 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்தது.
அதேவேளை, ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் அமெரிக்காவின் பங்காளியாக இருந்து வரும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2024 ல் மட்டும் ரஷ்யாவிலிருந்து 41.9 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
யூரோஸ்டாட் தரவுகளின் அடிப்படையில், 2022 மற்றும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுகளுக்கு இடையில் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் 86 சதவீதம் குறைந்துள்ளன. இந்த நிலையில், உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்பும் புடினும் அலாஸ்காவில் நேரிடையாக சந்தித்து விவாதிக்க முடிவு செய்ததை அடுத்து,
பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால், இந்தியா அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்கா 927 மில்லியன் டொலர் மதிப்புள்ள உரங்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
செல்வாக்கு குறையவில்லை
கடந்த ஆண்டு, ரஷ்யாவிலிருந்து உர இறக்குமதி மொத்தம் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்தது. ரஷ்யா உலகளாவிய உர ஏற்றுமதியாளர்களில் மிக முக்கியமான நாடாக உள்ளது, மேலும் அதன் செல்வாக்கு 2022ல் உக்ரைன் போருக்கு பின்னரும் குறையவில்லை.
2021 முதல் ரஷ்யாவிலிருந்து பல்லேடியம் இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது, 2024ல் அமெரிக்கா 878 மில்லியன் டொலர் மதிப்பிலும், 2025 ல் ஜூன் வரை 594 மில்லியன் டொலர் மதிப்பிலும் பல்லேடியம் இறக்குமதி செய்துள்ளதாக தரவு காட்டுகிறது. மேலும், இந்த ஆண்டு இதுவரை அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து 755 மில்லியன் டொலர் மதிப்புள்ள யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தை இறக்குமதி செய்துள்ளது.
உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மிகப்பெரிய பெட்ரோலிய விநியோகஸ்தராக ரஷ்யா இருந்தது. அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் கடல்சார் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கும், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது.
ஜூலை 2025 ல் ஹங்கேரி, பிரான்ஸ், ஸ்லோவாக்கியா, பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட முன்னணி ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்துள்ளன. கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் ரஷ்யாவையே நம்பியுள்ளது.
ரஷ்யா உடனான வர்த்தகம்
கடந்த நான்கு ஆண்டுகளில் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளின் இயற்கை எரிவாயு இறக்குமதி அதிகரித்துள்ளது, 2025 முதல் காலாண்டில் 5.23 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இரும்பு மற்றும் எஃகு இறக்குமதி 850 மில்லியன் டொலராக இருந்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யா உடனான வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் சரிவு காணப்பட்டதற்கு மாறாக, இந்தியா 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து 67 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
அதில் சுமார் 53 பில்லியன் டொலர் மதிப்புள்ள பெட்ரோலிய எண்ணெய்கள் மற்றும் கச்சா எண்ணெய். உக்ரைன் போருக்கு முன்னர் இந்தியா ரஷ்யாவிலிருந்து 8.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களையே இறக்குமதி செய்துள்ளது.
2024ல் சீனா சுமார் 130 பில்லியன் டொலர் மதிப்புள்ள ரஷ்ய பொருட்களை இறக்குமதி செய்தது, இதில் 62.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள பெட்ரோலிய எண்ணெய்கள் மற்றும் கச்சா எண்ணெய் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |