மோடியின் மௌனத்தை கலைக்க நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகள் காரசார விவாதம்
இந்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது.
திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ள எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட தொடர்பான பிரச்னை குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தேசிய வாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே
அப்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய தேசிய வாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே," மணிப்பூரில் 1,000 கலவரம், கொலைகள், பாலியல் தாக்குதல் உள்ளிட்ட பல பிரச்சனை நிலவி வருகிறது.
நாம் எல்லோரும் உணர்ச்சியற்றவர்கள் ஆகிவிட்டோமா? இது தான் மாநில அரசினுடைய பிரச்சனை. இதனால், மணிப்பூர் முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று பேசியுள்ளார்.
சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ்
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ், "மணிப்பூர் கலவரம் முற்றிலும் மனித உரிமை மீறலாகும். அரசு தலையிட்டால் இதனை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
மணிப்பூர் விவகாரத்தில் அரசு அலட்சியமாய் இருக்கிறது. வன்முறையை ஏற்படுத்துவதற்கு பெண்களை கருவியாய் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இதை பற்றி பேச வேண்டும்.
60,000க்கும் மேற்பட்ட மக்களும், 14,000 குழந்தைகளும் மணிப்பூர் கலவரத்தால் இடம்பெயர்ந்துள்ளனர். மக்களை பாதுகாப்பது முதலமைச்சரின் பொறுப்பு" என பேசியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய்
மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை கலைக்க நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் வாக்கு எண்களை பற்றியது அல்ல, மணிப்பூர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பற்றியது. அரசின் மீது நம்பிக்கை இல்லாத காரணமே நம்பிக்கை இல்லாத தீர்மானம் ஆகும்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். அவர், 80 நாள்கள் கழித்து தான் மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசியுள்ளார். அதுவும் அவர், 30 வினாடிகளில் பேசியுள்ளார்" எனக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |