இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது - திரைப்பட தாக்கத்தால் ஏற்பட்ட மாற்றம்
திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், கேரள பள்ளிகளில் மாணவர்கள் அமரும் விதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மலையாள பட தாக்கம்
வினேஷ் விஸ்வநாத் இயக்கத்தில், 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' (Sthanarthi Sreekuttan) என்ற திரைப்படம், கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.
கேரளாவின் கிராமப்புறத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெறும் மாணவர் தேர்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.
இந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தால், கேரள பள்ளிகளில் மாணவர்கள் அமரும் விதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பள்ளிகளில், நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர்ந்திருப்பார்கள்.
இந்த வரிசைமுறை மாணவர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துவதால், அதை மாற்றும் நோக்கில் அரை வட்ட வடிவில் மாணவர்கள் வகுப்பறையில் அமரும்படி படத்தில் காட்சி வைக்கப்பட்டிருந்தது.
கடைசி பெஞ்ச் மாற்றம்
இந்த காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, தற்போது கேரள பள்ளிகளிலும், இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுகிறது.
முதல்முறையாக கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் நிர்வகித்து வரும் கொல்லம் மாவட்டத்தில் வலக்கம் ஆர்.வி.வி. மேல்நிலைப்பள்ளியில் இந்த மாற்றம் அமுல்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மேலும் 6 பள்ளிகளில் இந்த முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல பள்ளிகள் இந்த மாற்றத்தை அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய படத்தின் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத், "கேரளாவில் உள்ள பல பள்ளிகளால் எனது படத்தில் உள்ள வகுப்பறை பெஞ்ச் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டத்தை இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்து கொண்டோம்.
இந்த காட்சியை படத்தில் வைத்தபோது பள்ளிகளில் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |