அது இல்லாமல் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை... நிபந்தனை விதித்த ஈரான்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முன்நிபந்தனைகளாக, லெபனானில் போர் நிறுத்தம் மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் ஆகியவற்றை ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் நிர்ணயித்துள்ளார்.
நிறைவேற்றப்பட வேண்டும்
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரான முகமது பாகர் காலிபாஃப் தமது சமூக ஊடகத்தில் குறிப்பிடுகையில், இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட நடவடிக்கைகளில் இரண்டை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னர் லெபனானில் போர் நிறுத்தம் மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் ஆகியவற்றை அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னர் இந்த இரண்டு விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தை நிரந்தர போர் நிறுத்தமாக மாற்றுவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இஸ்லாமாபாத் செல்வதற்காக விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே காலிபாஃப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாகிஸ்தான் தலைநகரில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஈரானிய தூதுக்குழுவிற்கு காலிபாஃப் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அவர்கள் நம்மை ஏமாற்ற முயன்றால், நமது பேச்சுவார்த்தைக் குழு அதற்கு அவ்வளவு இணக்கமாக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என ஜே.டி. வேன்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.
சமாதானத் திட்டம்
புதன்கிழமையன்று போர்நிறுத்தம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அது லெபனானையும் உள்ளடக்கியது என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அங்கு ஏறக்குறைய 1,900 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான முக்கிய மத்தியஸ்தரான பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், லெபனான் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்று கூறியிருந்தார். ஆனால், இஸ்ரேல் ஆதரவு நிலையில் இருந்து செயல்படும் அமெரிக்கா தற்போது அதை மறுத்து வருகிறது.

மேலும், அமெரிக்காவிடம் ஈரான் சமர்ப்பித்த 10 அம்ச சமாதானத் திட்டத்தில் லெபனான் போர் நிறுத்தமும் ஒரு கோரிக்கையாக இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த இரண்டு வார ஒப்பந்தத்தில் லெபனான் இடம்பெற்றிருந்ததை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
அதேவேளையில், இது ஒரு தவறான புரிதல் என்றும், ஈரானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜே டி வேன்ஸ் கூறியுள்ளார். முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்நிபந்தனையாக இதற்கு முன்னர் பகிரங்கமாக முன்வைக்கப்படவில்லை, இருப்பினும் முழுமையான பொருளாதாரத் தடைகள் நீக்கம் என்பது ஈரானின் 10 கோரிக்கைகளில் மற்றொன்றாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |