நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பு: பின்னணியில் நீங்கள் இல்லை என்றால்…அமெரிக்காவிற்கு ரஷ்யா சவால்!
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை அழிக்கவில்லை என்பதை அமெரிக்க நிரூபிக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்
கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு கடல் வழியாக எரிவாயுவை கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது.
முதலில் இரண்டு கசிவுகள் கண்டறியப்பட்ட நிலையில், இறுதியில் நான்கு கசிவுகளாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்த கசிவு தொடர்பாக பல்வேறு கூற்றுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில் சமீபத்தில் புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பெயரிலேயே அமெரிக்க கடற்படை டைவர்ஸ் வெடிமருந்துகளால் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயை வெடிக்க செய்ததாக அடையாளம் தெரியாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி இருந்தார்.
இதையடுத்து நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் நாசவேலை குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்து வருகிறது.
அமெரிக்கா நிரூபிக்க வேண்டும்
இந்நிலையில் மேற்கு ஐரோப்பாவுடன் ரஷ்யாவை இணைக்கும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் அழிக்கப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கா இல்லை என்றால் அதை அமெரிக்கா நிரூபிக்க முயற்சிக்க வேண்டும் என்று வியாழக்கிழமை ரஷ்ய தூதரகம் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
மேலும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 அழிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச பயங்கரவாத செயல் என்று ரஷ்யா கருதுகிறது, இதனால் இந்த சம்பவத்தை கம்பளத்தின் கீழ் துடைக்க ரஷ்யா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ரஷ்ய தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெள்ளை மாளிகை "முற்றிலும் தவறான மற்றும் முழுமையான கற்பனை" என்று நிராகரித்துள்ளது.