நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பு அமெரிக்காவின் சதி: உண்மையை உலகம் அறிய வேண்டும் என ரஷ்யா கருத்து
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை வெடிக்க செய்தது யார் என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும் ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பு
கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு கடல் வழியாக எரிவாயுவை கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டது.
இரண்டு கசிவுகள் முதலில் கண்டறியப்பட்ட நிலையில், பிறகு எரிவாயு கசிவானது நான்கு இடங்களில் உறுதிசெய்யப்பட்டது.
Reuters
இதற்கிடையில் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவுக்கு ரஷ்யாவே காரணம் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவை குற்றம் சாட்டிய நிலையில், இந்த வெடிப்புக்கு பின்னால் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கடற்படை வீரர்கள் இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியது.
உண்மையை உலகம் அறிய வேண்டும்
இந்நிலையில் அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் அறிக்கையை மேற்கோள் காட்டி, நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை வெடிக்கச் செய்தது யார் என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும், மேலும் நாசவேலை குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
புலிட்சர் பரிசு பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பெயரிலேயே அமெரிக்க கடற்படை டைவர்ஸ் வெடிமருந்துகளால் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயை வெடிக்க செய்ததாக அடையாளம் தெரியாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி இருந்தார்.
பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ் அறிக்கைகளை அமெரிக்க வெள்ளை மாளிகை முற்றிலுமாக நிராகரித்தது.
இது தொடர்பாக ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசுகையில், ஹெர்ஷின் அறிக்கைகள் மீது கவனம் மேற்கொள்வது தகுதியானது, மேலும் இது மேற்கத்திய ஊடகங்களால் இது முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்தார்.
அத்துடன் இறுதியில் இது 1,224 கி மீ நீளமுள்ள குழாய்களின் நாசவேலை குறித்த சர்வதேச விசாரணையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று பெஸ்கோவ் குறிப்பிட்டு இருந்தார்.
Reuters
உண்மையை உலகம் அறிய வேண்டியது அவசியமானது, ஆனால் வலையமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை முதன்மை ஆதாரமாக கருதுவதும் தவறு என்று பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ரஷ்ய அரசு டுமாவின் தலைவர் வியாசெஸ்லாவ் வோலோடின், பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.