நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு: பிரித்தானியாவின் சதி ஏற்பாடு என ரஷ்யா குற்றச்சாட்டு
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புக்கு பிரித்தானியாவை குற்றம்சாட்டியுள்ளது ரஷ்யா.
ரஷ்யா தவறான கூற்றுக்களை பரப்புகிறது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் பதில்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்புக்கு பின்னால் பிரித்தானியா இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு கடல் வழியாக எரிவாயுவை கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாயில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
இரண்டு கசிவுகள் முதலில் கண்டறியப்பட்ட நிலையில், பிறகு எரிவாயு கசிவானது நான்கு இடங்களில் உறுதிசெய்யப்பட்டது. மேலும் தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு நீர் மற்றும் வாயுவின் அழுத்தம் ஒரு சமநிலையை அடைந்த போது வாயு கசிவு நிறுத்தப்பட்டது.
Reuters
இதற்கிடையில் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவுக்கு ரஷ்யாவே காரணம் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவை குற்றம் சாட்டினர். ஆனால் மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை பிரித்தானிய கடற்படை வெடிக்கச் செய்ததாக சனிக்கிழமை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: முடிசூட்டப்பட்டார் தென்னாப்பிரிக்காவின் புதிய ஜூலு மன்னர்: டர்பனில் கலைகட்டிய விழா
மேலும் பால்டிக் கடலில் ரஷ்யாவின் முக்கியமான உள்கட்டமைப்பான நோர்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் மீதான பயங்கரவாத தாக்குதலில் பிரித்தானிய நிபுணர் குழுவின் ஒற்றை பிரிவு ஈடுபட்டதாகவும், இந்த பிரிவே சதி ஏற்பாடு மற்றும் அதனை செயல்படுத்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து உக்ரைன் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பை அவர்களின் பேரழிவுகரமான கையாளுதலில் இருந்து திசைதிருப்ப, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தவறான கூற்றுக்களை பரப்புகிறது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.