4 பெண்களை வன்கொடுமை செய்ததாக நோர்வே பட்டத்து இளவரசி மகன் மீது வழக்குப்பதிவு
நோர்வே பட்டத்து இளவரசி மகன் மீது வன்கொடுமை உட்பட 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நோர்வே பட்டத்து இளவரசி மகன்
நோர்வேயின் பட்டத்து இளவரசியான மெட்டே மாரிட் (Mette-Marit), வருங்கால மன்னரும் பட்டத்து இளவரசருமான ஹோகனை(Haakon) திருமணம் செய்வதற்கு முன்னர் இருந்த உறவில் பிறந்தவர் மரியஸ் போர்க் ஹோய்பி(Marius Borg Hoiby).
28 வயதான மரியஸ் போர்க் ஹோய்பி, அரச குடும்பத்தில் எந்த பதவியும் வகிக்கவில்லை என்றாலும் மன்னர் குடும்பத்தின் உறுப்பினராகவே உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடன் உறவில் இருந்த பெண்ணை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஒரு வார காலம் சிறையில் இருந்தார்.
இந்நிலையில், அவர் மீது ஒஸ்லோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 32 குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளது.
இதில், 4 பெண்களை வன்கொடுமை செய்தது, அதை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்தது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது, காவல்துறை உத்தரவை மீறியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளது.
இந்த குற்றங்கள் 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடந்ததாக கூறப்படுகிறது.
10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு
இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், மரியஸ் போர்க் ஹோய்பிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதில் சில கடுமையான குற்றங்களை மறுத்துள்ள அவர், ஒரு சில குற்றங்களை ஒப்புக்கொள்ள உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதன் வழக்கு விசாரணை 2026 ஜனவரி தொடங்கி 6 வாரங்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் அரச குடும்பத்தின் உறுப்பினர் என்பதால், வழக்கு விசாரணையில் அவருக்கு எந்தவிதமான சலுகைகளை வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
இது நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய விடயம் இதில் கருத்து கூற எதுவும் இல்லை என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |