ஓலா ஊபரில் பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இனி 2 மடங்கு கட்டணம்
ஓலா ஊபர் போன்ற டாக்ஸி நிறுவனங்களின் கட்டணங்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் பெரும்பாலான பொதுமக்கள், OLA, UBER, Rapido போன்ற டாக்ஸி சேவைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
அதேவேளை, அதிகதேவை உள்ள நேரங்களில், இந்த நிறுவனங்கள் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
2 மடங்கு கட்டணம்
இந்நிலையில், மத்திய அரசு இந்த டாக்ஸி சேவை நிறுவனங்களின் கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அதிகதேவை உள்ள நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு உயர்த்தி கொள்ளலாம். குறைவான தேவை உள்ள நேரங்களில் 50% வரை குறைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணி இல்லாமல் பயணிக்கும் தூரம் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகப் பயணிக்கும் தூரம், பயன்படுத்தப்படும் எரிபொருள் ஆகியவற்றை ஈடுசெய்யும் வகையில், வசூலிக்கப்படும் அடிப்படை கட்டணம் குறைந்தபட்சம் 3 கிலோமீட்டருக்கானதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்குப் பயணம் செய்யும் போது தவிர, வேறு எந்தச் சூழ்நிலையிலும் பிக்அப் செய்யத் தனியாகப் பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது.
பயணத்தை ரத்து செய்தால் அபராதம்
மேலும், பயணிகளோ அல்லது ஓட்டுநரோ, சரியான காரணம் இல்லாமல் ஒரு பயணத்தை ரத்து செய்தால், அவருக்கு ரூ.100க்கு மிகாமல் 10% அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து வாகனத்திலும், வாகன இருப்பிடம் மற்றும் கண்காணிப்பு சாதனம் (VLTD) இருக்க வேண்டும்.
இந்த கண்காணிப்புத் தகவல், டாக்ஸி நிறுவனம் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டு மையம் ஆகிய இரண்டிற்கும் கிடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான 3 மாதத்திற்குள், மாநில அரசு இதை அமுல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |