தமிழகத்தில் தொடரும் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
இன்று முதல் வரும் நவம்பர் 24-ம் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
இன்று(நவ 22) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை(நவ 23) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |