இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட வழங்காமல் பாகிஸ்தான் பழி வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்திய பாகிஸ்தான் பதற்றம்
பகல்ஹாம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவியது. அதற்கு பதிலடியக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது, தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவது என பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.
இதற்கு பழி வாங்கும் விதமாக பாகிஸ்தான் அரசும், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பல்வேறு இடையூறுகளை கொடுத்துள்ளது.
அடிப்படை வசதிகள் நிறுத்தம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணைய அலுவலகத்தில், அடிப்படை வசதிகளை துண்டித்துள்ளனர்.
அங்கு எரிவாயு குழாய்கள் பொறுத்தப்பட்டிருந்தாலும் அதன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சமையலுக்கான எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட கூடாது என விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு மினரல் வாட்டர் வழங்க கூடாது என இஸ்லாமாபாத்தில் உள்ள விற்பனையாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முறையாக வடிகட்டாத நீரை குடிப்பது ஆரோக்கியமற்றது என்பதால், இந்திய அதிகாரிகளின் குடும்பங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன.
உயர் ஆணையர் அலுவலகத்திற்கு செய்தித்தாள்கள் வழங்கப்பட்டு வந்ததும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அதிகாரிகளை பின்தொடர்ந்து கண்காணிப்பதாகவும், இந்திய அதிகாரிகளின் குடியிருப்பு வளாகங்களில் அங்கீகாரமற்ற நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைகள், தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்து வியன்னா மாநாட்டை மீறுவதாக அமைந்துள்ளது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய போதும், பாகிஸ்தான் அரசு இது போன்ற பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |