ஒரு நிமிடத்திற்கு 22,400 அடி கீழ்நோக்கி சரிந்த விமானம் - கடலில் தேடும் பாகிஸ்தான்
சார்ஜாவில் இருந்து வந்த விமானம் மாயமான நிலையில், அரபிக்கடலில் தேடுதல் பணியை பாகிஸ்தான் முடுக்கி விட்டுள்ளது.
மாயமான பாகிஸ்தான் விமானம்
கராச்சியைத் தளமாகக் கொண்ட கே2 ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்ட Boeing 737 என்ற சரக்கு விமானம், 5 பணியாளர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கி நேற்று புறப்பட்டது.

இரவு 9:18 மணியளவில், அதன் வழிசெலுத்தல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
கராச்சிக்கு மேற்கே சுமார் 287 கிலோமீட்டர் தொலைவில் விமானம் வேகமாக கீழிறங்குவது போல் ரேடாரில் காணப்பட்டுள்ளது. இதன் பிறகு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மாயமான விமானத்தை தேட, பல்வேறு சிவில் மற்றும் இராணுவ அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையை அரபிக்கடலில் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் கடற்படை, பிஎன்எஸ் சுல்பிகார் என்ற போர்க்கப்பலை அனுப்பியது. அதேவேளையில் பாகிஸ்தான் விமானப்படை தேடுதலுக்கு உதவுவதற்காக விமானங்களை அனுப்பியது. பாகிஸ்தான் கடற்படையின் ஏடிஆர் கண்காணிப்பு விமானம் ஒன்றும் தேடுதல் பணியில் இணைந்துள்ளது.
நிமிடத்திற்கு 22,400 அடி வேகத்தில் சரிந்த விமானம்
Flightradar24-இன் விமானப் பயணக் கண்காணிப்புத் தரவுகளின்படி, விமானம் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சுமார் 5,000 அடி கீழே சரிந்ததையும் , 30 வினாடிகளுக்குள் கிட்டத்தட்ட 6,000 அடி மேலே ஏறியதையும் , பின்னர் 36,550 அடியிலிருந்து கீழ்நோக்கிச் சென்றதையும் காட்டியுள்ளது.
நிமிடத்திற்கு 22,400 அடி என்ற அசாதாரணமான வேகத்தில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளது. இறுதியாக அனுப்பப்பட்ட தரவுகளின்படி, கடல் மட்டத்திலிருந்து வெறும் 1,100 அடி உயரத்தில் காணப்பட்டுள்ளது.
இது மிகவும் இயல்புக்கு மாறான ஒரு செங்குத்தான வேகம் என்றும், இது அசாதாரமான நிகழ்வு என்றும் விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இயந்திரம் செயலிழந்தாலும்கூட விமானங்கள் பொதுவாகத் திடீரெனக் கீழே இறங்குவதற்குப் பதிலாக மிதந்து செல்லும் என்று குறிப்பிட்டு, விமானத்தின் வேகமான இறக்கம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் தொடர்ந்து மனதாரப் பிரார்த்திக்கிறோம் எனவும், பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பிற அரசு அமைப்புகளுடன் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கே2 ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |