பழிக்குப்பழி... 50 இந்திய இராணுவத்தினர்: கொக்கரிக்கும் பாகிஸ்தான்
இந்தியாவின் சிந்தூர் நடவடிக்கையில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழிவாங்க சபதம் செய்த பாகிஸ்தான், 50 இந்திய வீரர்களைக் கொன்றதாகக் கூறுகிறது.
170 அணு ஆயுதங்கள்
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து அணு ஆயுத பலம் கொண்ட இரு அண்டை நாடுகள் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்தியா 180 அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் வசம் 170 அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளில் 40 முதல் 50 இந்திய வீரர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் அத்துல்லா தரார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிராந்தியத்தின் இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடையிலான நடைமுறை எல்லையில் இந்த வாரம் இரண்டு சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தானின் ஒன்பது இலக்குகள் மீது இந்தியா பயங்கர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து பதட்டங்கள் கொதி நிலையை எட்டியுள்ளது.
30க்கும் மேற்பட்டோர்
இந்தியா தரப்பு வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டியது. ஆனால் தீவிரவாதிகளின் முகாம்களில் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா உறுதுபட தெரிவித்துள்ளது.
மேலும், சிந்தூர் நடவடிக்கையில் குறைந்தது 100 தீவிரவாதிகள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் காஷ்மீரில் நடந்த காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இரவு முழுவதும் எதிரிகளின் சமீபத்திய தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறினார்.
பலியானவர்களில் ஏழு வயது சிறுவனும் அடங்குவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று, இந்தியா அனுப்பிய 25 இஸ்ரேலிய தயாரிப்பு ஹரோப் ட்ரோன்களையும் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |