போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு
ஆப்கானிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை
அக்டோபர் 9 ஆம் திகதி, ஆப்கானிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் உள்ள பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, கத்தார் மற்றும் துருக்கி இருநாடுகளுக்கிடையே அமைதிபேச்சுவார்த்தையை முன்னெடுத்தது. இதனடிப்படையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருநாடுகளுக்கிடையே 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதில், TTP தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.
ஆப்கானிஸ்தான் வான்வெளியில் அமெரிக்கா ட்ரோன் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என ஆப்கானிஸ்தான் கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா உடன் ஒப்பந்தம்
ஆப்கானிஸ்தானில் ட்ரோன் தாக்குதலை நடத்த அனுமதிக்க, பாகிஸ்தான் மற்றொரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டதோடு, இதன் காரணமாக ட்ரோன் தாக்குதலை தடுக்க முடியாது என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானை (TTP) பயங்கரவாத அமைப்பாக அறிவித்து. அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.
இதற்கு ஆப்கானிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், எந்த முடிவும் எட்டப்படாமல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
ராணுவ நடவடிக்கையை தொடங்கும் பாகிஸ்தான் ?
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், பேச்சுவார்த்தை பலனளிக்கத் தவறினால் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கையை நாட நேரிடும் என எச்சரித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி அசிம் முனீரின் டிரம்ப் உடனான சந்திப்பு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் மூலோபாய சீரமைப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தை திரும்ப அமெரிக்காவிற்கு தர வேண்டும் இல்லையெனில் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என டிரம்ப் மிரட்டியிருந்தார்.

மேலும், இரு நாடுகளில் எந்த ஒரு நாடு தாக்கப்பட்டாலும் அதை இரு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்பட வேண்டும் என சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |