மகனின் கண்முன்னே…ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட தாய், தந்தை: பாகிஸ்தானில் பயங்கரம்
பாகிஸ்தான் நாட்டில் மகனின் கண் முன்னே பெற்றோர் இருவரும் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டு இறந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரம்
பாகிஸ்தானின் பொஷாவர் நகரில் ஷகாப் கேல் பகுதியை சேர்ந்த பக்ஷீஷ், அவரது மனைவி மிஸ்மா ஆகிய இருவரும் திருமணமாகி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
அதைப்போலவே கடந்த வெள்ளிக்கிழமை பக்ஷீஷ் மற்றும் அவரது மனைவி மிஸ்மா ஆகிய இருவர் மத்தியிலும் சண்டை முற்றிய நிலையில், பக்ஷீஷ் தனது கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு மனைவி மிஸ்மாவை நோக்கி சுட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மிஸ்மா பக்கத்து அறைக்கு ஓடிச் சென்று அங்கிருந்த மற்றொரு துப்பாக்கியை எடுத்து கணவன் பக்ஷீஷ் நோக்கி சுட்டுள்ளார்.
இதில் கணவர் பக்ஷீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி மிஸ்மா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
மகனின் கண் முன்னே
பக்ஷீஷ்-மிஸ்மா இருவருக்கும் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு ஜயீப் என்ற மகன் உள்ளார்.
தாய் மற்றும் தந்தையின் இந்த கொடூரமான வெறிச்செயலை நேரடியாக பார்த்து அதிர்ச்சிக்குள்ளான சிறுவனுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஆத்திரத்தில் மகன் ஜயீப், தந்தையை சுட்டுக் கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.