உக்ரைனின் பெரும்பகுதி மக்களின் மனநிலை இதுதான்... ட்ரம்பும் ரஷ்யாவும் புதிய வியூகம்
உக்ரைனின் பெரும்பகுதி மக்கள் ரஷ்யாவுடன் இணைய விரும்புகிறார்கள் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுடன் இணையலாம்
ஒருநாள் உக்ரைன் நாடு ரஷ்யாவாக மாறலாம் என்ற கருத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களில் ரஷ்யாவும் அதே கருத்தை பதிவு செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Fox செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் ட்ரம்ப் பல்வேறு கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில், உக்ரைன் ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்படலாம் அல்லது மறுக்கலாம். அவர்கள் ஒருநாள் ரஷ்யாவுடன் இணையலாம் அல்லது தனித்து செயல்படலாம் என்றார்.
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த கருத்துக்கு பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov, உக்ரைனின் தற்போதைய நிலைமை பெரும்பாலும் ஜனாதிபதி ட்ரம்பின் வார்த்தைகளுடன் ஒத்துப்போகிறது என்றார்.
உண்மையில், உக்ரைனின் பெரும்பகுதி மக்கள் ரஷ்யாவுடன் இணையவே விரும்புகிறார்கள். அதுவே தற்போது நடந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதகமாக இருக்காது
இந்த விவகாரத்தில் உண்மையில் 50 சதவிகித வாய்ப்புள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதே, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தமது முதன்மையான இலக்குகளில் ஒன்று என குறிப்பிட்டிருந்த டொனால்டு ட்ரம்ப், முதல் 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, ட்ரம்பின் கருத்தை வரவேற்றுள்ள ரஷ்யாவும், போர் முடிவுக்கு வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளதுடன், ட்ரம்புடன் நேரிடையான பேச்சுவார்த்தைக்கும் விளாடிமிர் புடின் தயார் என அறிவித்தது.
ஆனால் ட்ரம்பும் புடினும் முன்னெடுக்கும் ஒப்பந்தமானது தங்களுக்கு சாதகமாக இருக்காது என்றே உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. தற்போது உக்ரைன் தொடர்பில் ட்ரம்ப் பதிவு செய்துள்ள கருத்து, ரஷ்யாவுடன் இணைந்து ட்ரம்பும் புதிய வியூகம் வகுப்பதாகவே நிபுணர்களின் அச்சமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |