குடியிருப்புக்குள் சிக்கிக்கொண்ட மக்கள்... தெருவில் குவியும் சடலங்கள்: நெருக்கடியில் அதிகாரிகள்
காஸா நகரம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மக்கள் குடியிருப்புக்குள் சிக்கிக்கொள்ள, தெருக்களில் இருந்து சடலங்களை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புக்குள்ளேயே கொல்லப்படும் சூழல்
காஸா நகரில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறி தெற்கு நோக்கி நகர வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்ததன் அடுத்த நாள் இப்படியான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், மக்கள் வெளியேற முடியாமல் குடியிருப்புக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், பலர் குடியிருப்புக்குள்ளேயே கொல்லப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளதுடன், காஸா நகரின் Tel Al Hawa மற்றும் Sabra பகுதிகளில் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மீட்புக்குழுக்களால் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, Tel Al-Hawa மற்றும் Rimal பகுதிகளில் குறைந்தது 30 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை சடலங்களை மீட்க முடியவில்லை என அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை துண்டுப்பிரசுரங்களை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம், காஸா நகர மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. காஸா நகரமானது மிக ஆபத்தான போர்ப் பகுதியாக தற்போதும் நீடிக்கிறது என்றே கூறுகின்றனர்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம் அமைத்துள்ள 350,000 மக்களுக்கான முகாம் பகுதி நோக்கி காஸா நகர மக்களையும் வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் கட்டாயப்படுத்தியுள்ளது.
திரும்ப முடியாத நிலை ஏற்படும்
ஆனால் இந்த நடவடிக்கையை ஐ.நா கடுமையாக விமர்சித்துள்ளது. பல குடும்பங்கள் பாதுகாப்பு கருதி பலமுறை இடம்பெயர்ந்துள்ளதாகவும், இது பாலஸ்தீன மக்களை கொடுமைப்படுத்துவது போன்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, இஸ்ரேல் உருவாக்கியுள்ள பாதுகாப்பான பகுதி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் பாலஸ்தீன மக்கள் கூறியுள்ளனர். தற்போது வெளியேறினால், தங்கள் உடமைகளை எடுத்துச் செல்ல முடியாது என்பதுடன் திரும்ப முடியாத நிலை ஏற்படும் என பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இறக்கவும் தயார் ஆனால் தெற்கு நோக்கி நகர முடியாது என்றும், கடந்த 9 மாதங்களாக இஸ்ரேலின் வெடிகுண்டுக்கும் பட்டினிக்கும் தாங்கள் பழக்கப்பட்டுள்ளதாகவும், நாங்கள் இங்கேயே தியாகிகளாக இறக்க தயாராக இருக்கிறோம் என்றும் பலர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |