மு.க.ஸ்டாலின் ஏன் வேட்டி சட்டை அணியாமல் பேண்ட் சட்டை அணிகிறார்? காரணம் கூறும் பிரேமலதா
திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கே துணை முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது, மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
பிரேமலதா பேசியது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "மின் கட்டண உயர்வு, ரேஷன் பொருட்களில் அத்தியாவசமான பாமாயில், பருப்பு ஆகியவை கிடைக்காதது, கூட்டணியில் இருந்தாலும் காவிரி நீரை நமக்கு பெற்று தராதது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இது கண்டிக்கத்தக்க விடயம். மக்கள் இதை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும். வேட்டியும் சட்டையும் தான் அணிய வேண்டும். ஆனால், அவர் பேண்ட் சட்டை அணிகிறார். அதற்கு காரணம் என்னவென்றால் அவரால் நடக்க முடியவில்லை, கைகளில் உதறல் இருக்கிறது.
அவர் பெரிய உடல்நல பாதிப்பில் உள்ளார். அது தெரியக்கூடாது என்பதற்காக தான் பேண்ட் சட்டை அணிகிறார். கைகளில் உதறல் தெரியக்கூடாது என்பதற்காக கைகளை பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்.
அவர் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். இதனால், திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களை துணை முதலமைச்சராக்க வேண்டும்.
அதேபோல், ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை வெளியில் கொண்டு வந்து நியாயம் வழங்க வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |