தமிழக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்
ரிஷிவந்தியம் தொகுதியில், கேப்டன் செய்த மக்கள் பணிகளை தமிழக அரசு மறைக்க நினைப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக அரசை கண்டிப்பதாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் 2011ஆம் ஆண்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் தொகுதி மக்களின் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், நியாயவிலை கடைகள் என மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினார்.
அனைத்திற்கும் மகுடம் சூட்டுவது போல் 60 ஆண்டுகளுக்கு மேலாக, அந்த தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்த மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை அகற்றி, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற அந்த பிரதான கோரிக்கையை எந்த அரசும் நிறைவேற்றவில்லை.
கேப்டன் அவர்கள் அந்த பாலத்தை அமைத்து தரவேண்டும் என்று முழுவீச்சுடன் டெல்லிவரை சென்று பாரத பிரதமரை சந்தித்து, மத்திய சிறப்பு நிதியாக ரூபாய் 22 கோடியை பெற்று வந்து அந்த உயர்மட்ட பாலத்தை அமைத்தார்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடைகளை விஜயகாந்த் அமைத்து கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மணலூர்பேட்டையில் கேப்டன் அவர்கள் அமைத்திருந்த பயணியர் நிழற்குடையையும் கால்வாய் கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதை தடுக்க முற்பட்டபோது, தேமுதிகவினரும், பொதுமக்களும் திரண்டு அதை தடுத்து நிறுத்தினர்.
அப்போதும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கீழே கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மேலே கான்கிரீட் போட்டு மூடிவிட்டு, அதே இடத்தில மீண்டும் பயணியர் நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிச்சயமாக அமைத்து தருகிறோம் என உறுதி அளித்தனர்.
கால்வாய் வேலை முடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் திமுகவினரின் தூண்டுதலால் இதுவரை அந்த நிழற்குடையை அமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இதை கண்டித்து கடந்த டிசம்பர் மாதம் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இன்றுவரை பயணியர் நிழற்குடை அமைக்க எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை. இதன்மூலம் ரிஷிவந்தியம் தொகுதியில் கேப்டன் செய்த பணிகளை மக்களிடம் இருந்து மறைக்கும் விதமாக, அங்கு இருக்கிற திமுகவினரின் தூண்டுதலால் அரசு அதிகாரிகள் செயல்படுவதாக மக்களே குற்றம்சாட்டுகிறார்கள்.
முதலில் மாடாம்பூண்டி கூட்ரோடு, அடுத்தது மணலூர்பேட்டை என கேப்டன் அவர்களின் அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் அங்குள்ள திமுகவினரையும், அவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் இதை கண்டித்து, வருகின்ற 20.01.2024 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தேமுதிக #பொதுச்செயலாளர் திருமதி.#பிரேமலதா #விஜயகாந்த் அவர்கள் #ரிஷிவந்தியம் தொகுதியில் #கேப்டன் செய்த #மக்கள் #பணிகளை மறைக்க நினைக்கும் #தமிழக #அரசை #கண்டித்து அறிக்கை - 11.01.2024 #dmdkofficial#dmdkparty #Premalathavijayakant#GeneralSecretary pic.twitter.com/gc7rq4eQK7
— DMDK Party (@dmdkparty2005) January 11, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |