நடிகர்கள் யாருக்கும் ரெட் கார்டு வழங்கவில்லை: தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம்
சிம்பு, விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகிய நடிகர்கள் யாருக்கும் ரெட் கார்ட் வழங்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு
சென்னையில் ஜூன் 18ம் திகதி தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு சரியாக கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிம்பு, விஷால், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு மற்றும் அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது.
மறுப்பு தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்
இந்நிலையில் நடிகர் சிம்பு, விஷால், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு மற்றும் அதர்வா ஆகியோர் மீது எத்தகைய ரெட் கார்ட்டுகளும் வழங்கப்படவில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி பிபிசி தமிழ் செய்தி நிறுவனத்துடனான தொலைபேசி உரையாடலின் போது விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக முறையாக ஒத்துழைப்பு வழங்காத நடிகர்கள் மீதான புகாரை முறையாக ஆராய்ந்து, அவர்களிடம் தயாரிப்பாளர்களுடன் சுமூகமாக செல்ல வேண்டும் இல்லையென்றால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைக்க பட மாட்டாது என்றே பொதுக் குழுவில் பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை நாங்கள் எந்த நடிகர்களின் பெயர்களையும் இது தொடர்பாக குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு
கடந்த 1993ம் ஆண்டு வெளியான உழைப்பாளி திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விநியோகஸ்தர்களுக்கு வழங்காமல் நேரடியாக திரையரங்குகளுக்கு விற்பனை செய்ததை எதிர்த்து அவரது திரைப்படங்களை இனி வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு ரெட் கார்டு வழங்கியது.
பிறகு தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ரஜினிகாந்த் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மீதிருந்த ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது.