ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வராதீங்க! பெண் விரிவுரையாளருக்கு தடை... அவர் எடுத்த அதிரடி முடிவு
இந்தியாவில் ஹிஜாப் அணிந்து பாடம் எடுக்க கல்லூரி தடை விதித்ததால் பெண் விரிவுரையாளர் தனது பணியை ராஜினிமா செய்துள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த பெண்களை வகுப்புக்குள் அனுமதிக்காததை தொடர்ந்து அவர்கள் போராட்டம் செய்தது, இந்து மாணவர்கள் பதிலுக்கு காவித் துண்டு அணிந்து போராடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் பணியாற்றி வரும் சாந்தினி என்ற பகுதி நேர பெண் விரிவுரையாளர், கடந்த 15-ம் திகதி தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்துள்ளார்.
ஆசிரியர்கள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று கூறிய கல்லூரி நிர்வாகம் அவரை வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில், மாணவர்களுக்கு மட்டும்தான் ஒரே சீருடை சட்டம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் ஆசிரியர்களுக்கும் அது உண்டு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியவர் அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 16-ம் திகதி தன் பணியை ராஜினாமா செய்து அதை அறிவித்தார்.
மேலும் அவர் இத்தனை வருடங்களாக நான் ஹிஜாப் அணிந்து வந்துதான் வகுப்பெடுத்திருக்கிறேன். என் ஆடை குறித்து நான் முடிவெடுக்க முடியாது என்று கூறப்படும் சூழ்நிலையை நான் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்தியாவில் கலாசாரம் பெண்களைக் கட்டுப்படுத்துவதாக உணர்கிறேன்.
எங்கள் வீட்டில் என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். சகோதரர்கள், சகோதரிகளுக்கு இடையில் எங்கள் தந்தை எந்த வேறுபாடும் காட்டவில்லை. ஹிஜாப் பிரச்னையில் நல்லவிதமான தீர்ப்பு வந்தவுடன் முதல்வர் என்னை மறுபடியும் கல்லூரியில் சேர்த்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படும் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீது அனைவரது பார்வையும் இருக்கும் நிலையில், பன்முகத்தன்மை, தனித்துவம் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.