கருப்பு உடைகளில் வந்த புடின்., புதிய ஸ்னைப்பர் துப்பாக்கியை சுட்டுப்பார்க்கும் வீடியோ வைரல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.
முழுமையாக கருப்பு உடைகளில் வந்த வர புதிய ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்றை எடுத்து பல முறை சுட்டுப்பார்த்தார்.
ரஷ்யாவில் மாஸ்கோவில் உள்ள பயிற்சி மையத்திற்குச் சென்ற அதிபர் விளாடிமிர் புடின், புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கியை சுட்டுப்பார்த்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசான் பகுதியில், பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் இணைந்து புடின் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கியை சுடுவதை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இராணுவ பயிற்சி முகாம்களில், பயிற்சி மற்றும் விநியோகத்தில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதில் முன்னேற்றம் காண்பதை நோக்கமாகக் கொண்டு புடின் பார்வையிட்டதாக கூறப்படுகிறது.
காதுக்கு பாதுகாப்பு கருவியையும், கண்களுக்கு பாதுகாப்பு கண்ணாடியையும் அணிந்துகொண்டு புடின், தரையில் ஒரு கருப்பு வலைக்குள் படுத்துக்கொண்டு, புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ஸ்னைப்பர் (Russian SVD sniper) துப்பாக்கி ஒன்றில் பலமுறை சுட்டு சோதனை செய்து பார்த்தார்.
அந்த துப்பாக்கியின் மூலம் 1000 அடி தொலைவில் இருந்த இலக்கை அவர் குறிவைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தனது ஷாட்களில் இலக்கை சரியாக தாக்கினாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு அதிகாரிகளுக்கு கைகுலுக்கி தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் புடின் தெரிவித்தார்.
இதனிடையே, புடினை சுற்றி பாதுகாப்புக்காக வந்த இராணுவ அதிகாரிகளின் கையில் "nuclear football" இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது, அணுகுண்டு தாக்குதலை தொலைவில் இருந்து அங்கீகரிக்க தேவையான குறியீடுகள் உள்ளடங்கிய பெட்டியை அவர்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
பொது மக்களில் இருந்து உக்ரைன் போருக்காக படைதிரட்டப்பட்டுள்ள புதிய வீர்களுக்கு இந்த பயிற்சி மையங்களில் அடுத்தடுத்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Skynews