மோடியை பற்றி எனக்கு தெரியும் - டிரம்ப்பிற்கு பதிலடி கொடுத்த புடின்
இந்தியா தங்களை யாரும் அவமானப்படுத்த அனுமதிக்காது என புடின் பேசியுள்ளார்.
ரஷ்யா எண்ணெய் விவகாரம்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்தது.
மேலும், ஐநா சபையில் ஆற்றிய உரையில், ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதன் மூலம் சீனா மற்றும் இந்தியாவை உக்ரைன் போரின் முதன்மை நிதி வழங்குபவர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சித்தார்.
இந்நிலையில், இன்று சொச்சியில் நடைபெற்ற வால்டாய் கலந்துரையாடலில் பேசிய ரஷ்யா ஜனாதிபதி புடின், டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மோடியை புகழ்ந்த புடின்
இதில் பேசிய அவர், "ரஷ்யாவின் வர்த்தக கூட்டாளிகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், அது உலகளாவிய எரிசக்தி விலைகளை உயர்த்தும். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்க கட்டாயப்படுத்தும்.
ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது முற்றிலும் ஒரு பொருளாதார கணக்கீடு, இதில் எந்த அரசியலும் இல்லை. இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், சுமார் $9-10 பில்லியன் அது சில இழப்புகளைச் சந்திக்கும்.
இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள், என்னை நம்புங்கள், அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். இந்தியா தங்களை யாரும் அவமானப்படுத்த அனுமதிக்காது.
பிரதமர் மோடியை பற்றி எனக்கு தெரியும். அவர் ஒரு சமநிலையான, அறிவார்ந்த, தேசிய நோக்குடைய தலைவர். அவர் அத்தகைய முடிவுகளை எடுக்க மாட்டார்.
அமெரிக்காவின் வரிகளால், இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷ்யாவிலிருந்து செய்யப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதியால் சமப்படுத்தப்படும். வர்த்தக ஏற்றத் தாழ்வை நீக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்.
இந்தியா தனது சுதந்திரத்திற்காகப் போராடி வந்த காலத்திலிருந்தே ரஷ்யா-இந்தியா உறவு சிறப்புடன் இருந்து வருகிறது. அதை அந்த மக்கள் மதிக்கிறார்கள். அவர்களின் நாட்டுடனோ, மாநிலத்துடனோ எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருந்தது இல்லை." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |