ட்ரம்ப் ஆதரிக்கும் உக்ரைன் சமாதான ஒப்பந்தத்தை நிராகரித்த புடின்: அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும், ட்ரம்ப் ஆதரிக்கும் சமாதான ஒப்பந்தத்தை விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
போருக்கான ஆயுதம்
உக்ரைன் தலைநகர் மீது மிக மோசமானத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ள நிலையிலேயே, சமாதான ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான அமெரிக்க-ஐரோப்பிய ஒப்பந்தமானது, அமைதிக்கான ஒருங்கிணைந்த பாதைக்கு மாறாக உண்மையான போருக்கான ஆயுதம் என்று விமர்சித்துள்ளது.
ஆனால், ரஷ்யாவின் இந்த முடிவுக்கு முதன்மை காரணமாக, வெனிசுலாவில் இருந்து வெளியேறிய எண்ணெய் கப்பல்களில் ஒன்றை அமெரிக்க கடற்படை அத்துமீறி கைப்பற்றியதே என கூறுகின்றனர்.
மட்டுமின்றி, ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளை மிகக் கடுமையாக தண்டிக்கும் பிரேரணை ஒன்றை ட்ரம்ப் ஆதரித்திருப்பதும், புடினின் இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
வியாழக்கிழமை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரம்பும் ஐரோப்பிய நாடுகளும் முன்வைத்துள்ள அந்த ஆவணம் ஒரு சமாதானத் தீர்விலிருந்து மிகவும் தொலைவில் இருந்தது என கடுமையாக விமர்சித்திருந்தது.

வான்வழித் தாக்குதல்
இந்தப் பிரகடனம் நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக இராணுவமயமாக்கல், தீவிரமடைதல் மற்றும் மேலும் மோதல் மோசமடைதலைத் தொடர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த அதிரடியான நிராகரிப்பை அடுத்து, அமெரிக்க தூதரகம் கியேவில் உள்ள அதன் குடிமக்களுக்கு ஒரு தீவிர எச்சரிக்கையை விடுத்தது.

அடுத்த சில நாட்களில் எந்த நேரத்திலும் குறிப்பிடத்தக்க வான்வழித் தாக்குதல் நிகழலாம் என்பதால் அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக வேண்டும் என அறிவுறுத்தியது.
மட்டுமின்றி, பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் காணப்பட்டதும் அமெரிக்காவின் இந்த அறிவுறுத்தலுக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்கா முன்வைத்துள்ள ஐந்து அம்ச பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைன் நிராகரித்தாலும், ட்ரம்ப் ஆதரிக்கும் இந்த 20 அம்ச சமாதான ஒப்பந்தம் மொத்தமாக சீர்குலையும் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |