சாவை நோக்கி தன் படைவீரர்களை அனுப்பும் புடின்: பின்னணியில் இருக்கும் தன்மானப் பிரச்சினை
உக்ரைன் மரியூபோலிலுள்ள உருக்காலையைக் கைப்பற்றுவதை தன்மானப் பிரச்சினையாக கருதும் புடின், அந்த உருக்காலையையாவது கைப்பற்றினால்தான் இம்மாதம் 9ஆம் திகதி வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது ஜம்பமடித்துக்கொள்ள முடியும் என கருதுவதாக பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆகவே, சாவு வரும் என்று தெரிந்தும் தன் வீரர்களை பலிகொடுத்தாவது Azovstal உருக்காலையைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார் அவர்.
ஆகவே, இப்போதும் ரஷ்யப் படையினர் வன்மத்துடன் Azovstal உருக்காலையை நோக்கி பயங்கரமாக தாக்குதல் நடத்திவருகிறார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது நாஸி ஜேர்மனி சரணடைந்ததை வெற்றி விழாவாக ஆண்டுதோறும் ரஷ்யா உட்பட பல நாடுகள் கொண்டாடி வருகின்றன. ரஷ்யாவில் மே 9 அன்று நடத்தப்படும் அந்த வெற்றி விழாவில் நடத்தப்படும் படைகள் அணிவகுப்பில் நெஞ்சை நிமிர்த்தி நின்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார் புடின்.
ஆனால், இம்முறை தெரியாத்தனமாக உக்ரைனுக்குள் காலை விட்டு, ஜெயிக்க முடியாமல் தனது படைகள் தடுமாறி நிற்கும் நிலையில், அவரால் எப்படி வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் மிடுக்காக நிற்க முடியும்.
ஆக, உக்ரைனை கைப்பற்ற முடியாது என்பது தெரிந்த விடயமாகிவிட்டது. குறைந்த பட்சம் Azovstal உருக்காலையையாவது கைப்பற்ற விரும்புகிறார் அவர்.
ஆனால், Azovstal உருக்காலையைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல என கருதப்படுகிறது. காரணம், அந்த உருக்காலை மிகவும் விசாலமானதாம். நான்கு சதுர மைல்களுக்கு தொழிற்சாலைக் கட்டிடங்கள், சேமிப்புக் கிடங்குகள் முதலானவை, அணுகுண்டு வீசப்பட்டாலும் தாங்கக்கூடிய வகையிலான சுரங்கப்பாதைகள் மீது நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளனவாம்.
அந்த சுரங்கப் பாதைகளுக்குள் தற்போது சுமார் 2,000 உக்ரைன் வீரர்களும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இருக்கிறார்கள். அந்த வீரர்களும் Azovstal உருக்காலையைக் காப்பாற்ற போராடி வருகிறார்கள்.
ஆகவே, 9ஆம் திகதி வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது புடின் கௌரவமாக அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதற்காக, தங்கள் வீரர்கள் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், ரஷ்ய தளபதிகள் அவர்களை Azovstal உருக்காலை பகுதியில் குவிக்க முடிவு செய்துள்ளார்களாம்.