இமானுவேல் மக்ரோன், ஓலாஃப் ஷோல்ஸை எச்சரிக்கும் விளாடிமிர் புடின்!
உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதற்கு எதிராக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தலைவர்களை ரஷ்ய ஜானதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சனிக்கிழமையன்று பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தலைவர்களிடம், உக்ரேனிய துறைமுகங்களில் சிக்கியுள்ள தானியங்களை அனுப்புவதற்கான வழிகளைத் தேட மாஸ்கோ தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால், அதற்கு முதலில் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகளை நீக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஒரு படி மேலாக சென்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) மற்றும் ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) ஆகியோரை உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதற்கு எதிராக விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
மேலும் மேற்கத்திய நாடுகளை சார்ந்து இருக்கும் உக்ரைனின் நிலைமையை மேலும் சீர்குலைக்க ரஷ்யாவால் முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை 80 நிமிடங்கள் நீடித்ததாக ஜேர்மன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலக சந்தைகளுக்கு தானியங்களை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது என்றால், அது "மேற்கத்திய நாடுகளின் தவறான பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளின்" விளைவு தான் என்று புடின் கூறினார்.
"கருங்கடல் துறைமுகங்களில் இருந்து உக்ரேனிய தானியங்களை ஏற்றுமதி செய்வது உட்பட தானியங்களை தடையின்றி ஏற்றுமதி செய்வதற்கான விருப்பங்களைக் கண்டறிய ரஷ்யா தயாராக உள்ளது" என்று இமானுவேல் மக்ரோன் மற்றும் ஓலாஃப் ஸ்கோல்ஸிடம் புடின் கூறினார் என்று கிரெம்ளின் கூறியது.
இதையும் படிங்க: வாரத்திற்கு 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! பிரித்தானிய நிறுவனங்கள் சோதனை
மக்ரோனும் ஷோல்ஸும் தங்கள் பங்கிற்கு தானிய ஏற்றுமதியை அனுமதிக்க உக்ரேனிய ஒடெசா துறைமுகத்தின் முற்றுகையை நீக்குமாறு ரஷ்யாவை வலியுறுத்தினர் என்று பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் கூறியது.
உக்ரைனின் மேற்கத்திய ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிக ஆயுதப் பொருட்களை அனுப்புவது ஆபத்தானது, இது சூழலை மேலும் சீர்குலைக்கும் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கும் என்று மக்ரோன் மற்றும் ஷோல்ஸிடம் புடின் எச்சரித்தார்.