இலங்கையில் ரேடார் தளம்., இந்தியாவை உளவு பார்க்கும் சீனாவின் திட்டம் அம்பலம்
இந்தியாவை உளவு பார்க்க இலங்கையில் ரேடார் தளம் அமைக்கும் சீனாவின் திட்டம் அம்பலமாகியுள்ளது.
இலங்கையில் சீனாவின் 'ரேடார்' தளம்
இலங்கையில் சீனா ரேடார் தளம் அமைத்து இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களை கண்காணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் டோண்ட்ரா பே என்ற இடத்தில், 45 ஏக்கர் பரப்பளவில் 'ரேடார்' தளம் ஒன்றை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்மூலம் கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உட்பட இந்திய பெருங்கடல் பகுதியை சீனா உளவு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளதாகவும் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடற்படை உளவுப்பிரிவு அறிக்கை அளித்துள்ளது.
மேலும், இந்த ரேடார் தளத்தின் மூலம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய ராணுவ தளங்களையும் உளவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமின்றி, இந்திய பெருங்கடலில் மேற்கத்திய கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்த ரேடார் தளம் உதவும் என அஞ்சப்படுகிறது.
Photo: AP/Eranga Jayawardena
இலங்கையில் சீன ராணுவத்தின் நடமாட்டம்
இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கையில் சமீபகாலமாக சீன ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர்ப் பயிற்சிகளையும் சீன ராணுவம் அளித்துவருகிறது.
இந்நிலையில், இலங்கையின் டோண்ட்ரா விரிகுடாவுக்கு அருகில் உள்ள காடுகளில் சீன அறிவியல் அகாடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் ரேடார் தளத்தை அமைக்க திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ET
சீனாவிடமிருந்து, இலங்கை பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி பெற்றுள்ளது. இதன் காரணமாக, இலங்கை அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சீனா முயற்சிக்கிறது. இலங்கையை பயன்படுத்தி இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே சீனாவின் திட்டமாக உள்ளது.
இலங்கையில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, முன்னதாக 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை ஆறு நாட்களுக்கு நிறுத்தி வைத்து. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.