இந்தியப் பங்குச்சந்தையை உலுக்கிய ரூ 15 லட்சம் கோடி மோசடி: சிக்கிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' தற்போது இந்திய கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப்பெரிய கணக்கு மற்றும் நிதி மோசடிப் புகாரில் சிக்கியுள்ளது.
பெரும் அதிர்ச்சி
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கடந்த சில நிதியாண்டுகளில் தனது கணக்கு வழக்குகளில் பல லட்சம் கோடி ரூபாய் வருவாயை உண்மைக்கு மாறாக மிகைப்படுத்திக் காட்டியுள்ளதாக செபி (SEBI) கண்டுப்படித்த நிலையில், இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் (BSE) ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் சரிந்து, லோயர் சர்க்யூட் ஆகி ரூ.104.65 என்ற விலையைத் தொட்டு முதலீட்டாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மார்ச் 2024 ல் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவர் அளித்த ரகசியப் புகாரின் அடிப்படையிலேயே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தப் புகாரில், நிறுவனத்தின் கணக்குகளில் பல ஆண்டுகளாக வர வேண்டிய வர்த்தகக் கணக்குகள் (Trade Receivables) பெருமளவில் நிலுவையில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, செபி அமைப்பு BDO India Services என்ற Forensic Auditor நிறுவனத்தை நியமித்து கடந்த 2021 முதல் 2025 வரையிலான நிதியாண்டுகளின் கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் முடிவில், ஜூன் 3 ஆம் திகதி இரவு செபி 109 பக்கங்கள் கொண்ட இடைக்கால உத்தரவை (Interim ex-parte order) பிறப்பித்துள்ளது. அதில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது கணக்குகளில் காட்டியுள்ள ஒட்டுமொத்த வருவாயில் 97% முதல் 99% வரையிலான வர்த்தகம் முற்றிலும் உண்மைக்கு மாறானது, மிகைப்படுத்தப்பட்டது என்று அறிவித்துள்ளது.
மேலும் நிதிப் பரிமாற்றங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் செபி முதற்கட்ட ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் மேத்தா பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கவோ, விற்கவோ அல்லது வர்த்தகம் செய்யவோ தற்காலிகமாக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 முதல் 2025 வரையிலான நிதியாண்டுகளில் இந்நிறுவனம் பெற்ற 15.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வருவாய் முற்றிலும் பொய்யானது என செபி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தங்க வர்த்தகம்
2015ல் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி தங்க சுத்திகரிப்பு ஆலையான 'வல்காம்பி' (Valcambi SA) நிறுவனத்தை 400 மில்லியன் டொலருக்குக் கைப்பற்றி உலக தங்க வர்த்தகச் சந்தையில் தடம் பதித்தது.
அத்துடன், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 97% முதல் 99% வரையிலான வர்த்தகம் இந்த வல்காம்பி போன்ற வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள் மூலமாகவே வந்துள்ளதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், சுவிட்சர்லாந்தின் வல்காம்பி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் கணக்குகளை (Audited standalone financial statements) ஆராய்ந்த போது, அதில் மிகக் குறைந்த அளவிலான வருவாய் மட்டுமே பதிவாகியுள்ளது அம்பலமாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் வல்காம்பி நிறுவனம் வெறும் ரூ.543 கோடி மட்டுமே தனிப்பட்ட வருவாயாகக் காட்டியிருந்த சூழலில், அதன் தாய் நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் தங்களின் ஒருங்கிணைந்த வருவாயில் வல்காம்பி மூலம் பல லட்சம் கோடி ரூபாய் வந்ததாகக் காட்டியுள்ளது.
சுமார் 15.15 லட்சம் கோடி ரூபாய் வருவாய் எவ்வித முறையான ஆதாரங்களும், வாடிக்கையாளர் விபரங்களும் இன்றி போலியாக மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாகச் செபி குற்றம் சாட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |