கழுத்தில் கயிறு கட்டி கொல்லப் போவதாக மிரட்டல்! கத்தாரில் கதறும் தமிழனின் பரிதாப நிலை
கத்தாரில் ஒட்டகம் மேய்க்கச்சொல்லி தன்னை கொடுமைப்படுத்துவதாக தமிழக நபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ராமநாதபுரத்தின் பனைக்குளத்தை சேர்ந்தவர் காதர் மைதீன்(வயது 39), திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்ல முடிவெடுத்தார்.
இதற்காக பணம் செலுத்தி டிரைவர் வேலைக்கு விண்ணப்பித்த காதர் மைதீனுக்கு, கத்தார் சென்றதும் ஒட்டகம் மேய்க்கும் வேலை காத்திருந்தது.
தனக்கு ஒட்டகம் மேய்க்கத் தெரியாது என காதர் மைதீன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சரியாக உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கத்தாரில் ஒட்டகம் மேய்க்கச்சொல்லி சித்ரவதை செய்கின்றனர்.
ஒவ்வொரு நிமிடமும் சிரமப்படுகிறேன். கழுத்தில் கயிறு போட்டு, அடித்து மிதிக்கின்றனர். இங்கே கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்.
6 மாதமாக கொடுமைப்படுத்துகின்றனர். காரை ஏற்றி கால் முறிந்துள்ளது என அழுது புலம்பியுள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி ஷாஜிதா பானு கூறுகையில், எனது கணவருக்கு விசா வழங்கிய நபர் ஏமாற்றிவிட்டார், ஒட்டகம் மேய்க்கச் சொல்லி என் கணவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர், இதனை என் கணவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இதனால் என் கணவரை மீட்டுத்தரக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன், எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து என் கணவரை மீட்டுத்தரவேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.