செங்கடலில் மூழ்கிய "சிந்த்பாத்" சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல்! 6 ரஷ்ய பயணிகள் உயிரிழப்பு
செங்கடல் பகுதியில் நடந்த கோர விபத்தில் 6 ரஷ்ய சுற்றுலா பயணிகள் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 ரஷ்ய சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
எகிப்தின் பிரபலமான சுற்றுலா நகரமான ஹர்காடா அருகே செங்கடலில் "சிந்த்பாத்" என்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 ரஷ்ய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் காலை 10:00 மணியளவில் (GMT 08:00) நிகழ்ந்துள்ளது.
மீட்புக்குழுவின் துரித நடவடிக்கை
பேரழிவில் சிக்கிய 39 பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். இருப்பினும், 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து எகிப்திய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வந்த "சிந்த்பாத்" கப்பல் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பது மர்மமாக உள்ளது.
சமீபத்திய மாதங்களில் செங்கடலில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய கடல் விபத்து இதுவாகும்.
கடந்த நவம்பர் மாதம், மார்சா ஆலம் அருகே படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |