மழை வெள்ளத்தில் சிக்கிய ரயில்: 500 பயணிகளின் நிலை என்ன?
தென்தமிழகத்தில் பெய்த கனமழையால், ரயில் நிலையத்தில் 3 -வது நாளாக சிக்கி தவிக்கும் பயணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மழையால் ரயில் நிறுத்திவைப்பு
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததில் பல்வேறு பகுதி மக்கள் பாதிப்படைந்தனர்.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்தது. காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழையும், திருச்செந்தூரில் 70 சென்டிமீட்டர் மழையும், சாத்தான்குளத்தில் 60 சென்டிமீட்டர் மழையும் பெய்து தீவு போல மாறியுள்ளது.
இந்நிலையில், கனமழையின் காரணமாக கடந்த 17ம் திகதி திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலுக்குள் இருந்த 500 பயணிகள் சிக்கினர். அவர்கள், உணவு, தண்ணீரின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பயணிகள் மீட்பு
இதனைத்தொடர்ந்து, பயணிகளை எப்படி மீட்க வேண்டும் என்று 2 நாட்களாக ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, சில சிக்கல் காரணமாக பயணிகளை மீட்பதில் சிரமம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பயணிகளை மீட்பதற்காக ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையதில் 3 நாட்களாக சிக்கிய பயணிகளை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு உணவு பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |