மன்னர் மீது சேற்றை வீசி கொலைகாரர்கள் என கூச்சலிட்ட மக்கள்... ஐரோப்பிய நாட்டில் சம்பவம்
ஸ்பெயின் நாட்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற மன்னர் பெலிப் மற்றும் ராணியார் லெதிசியா மீது சேற்றை வீசி அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பதவி விலக வேண்டும்
மன்னரும் ராணியாரும் மட்டுமின்றி, பிரதமர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீதும் சேற்றை வீசி கொலைகாரர்கள் எனவும் மக்கள் கூச்சலிட்டுள்ளனர். பெருவெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வலென்சியா மாகாணத்தின் Paiporta நகராட்சியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை வலியுறுத்தும் எச்சரிக்கை ஏன் வெள்ளம் பெருக்கெடுத்த பிறகு அனுப்பப்பட்டது என்ற கோபமே மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
மட்டுமின்றி, நடந்த துயர சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் Pedro Sánchez மற்றும் வலென்சியாவின் பிராந்திய தலைவர் Carlos Mazón ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எதிர்பாராமல் மக்கள் சேற்றை வீசவும் மெய்க்காப்பாளர்கள் குடைகளைப் பயன்படுத்தி பிரதமரை விரைவாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பிரதமர் Pedro Sánchez முதல் நாளிலேயே ஒரு மண்வெட்டியுடன் இங்கு வந்திருக்க வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
ஆனால் மன்னர் பெலிப் தமது பயணத்தை தொடர்ந்ததுடன், பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும், இளைஞர் ஒருவர், எங்களை நீங்கள் கைவிட்டு விட்டீர்கள் என மன்னரிடம் கோபத்தில் முறையிட்டுள்ளார்.
பொதுமக்கள் ஆத்திரம்
பெருவெள்ளத்திற்கு பிறகு அதன் பின்விளைவுகளைச் சமாளிக்க மக்களை தனித்து விடப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டுமின்றி, பெருவெள்ளம் பேய் மழை குறித்து தெரிந்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மன்னரிடம் அந்த இளைஞர் முறையிட்டுள்ளார்.
இந்த நிலையில், பிராந்தியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நகரத்திற்குச் செல்வதற்கான மன்னரின் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டதாக ஸ்பெயினின் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.
பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை வானிலை ஆய்வு மையம் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மேலும் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |