போருக்கான உண்மையான காரணம் இது தான்... புது விளக்கமளித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்
உக்ரைனில் ரஷ்யாவுக்கு சொந்தமான வரலாற்றுசிறப்புமிக்க நிலத்தை மீட்கவே தமது ராணுவம் போராடி வருவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தேசபக்தி பேரணி
உக்ரைன் தாக்குதலுக்கு ஆதரவாக மாஸ்கோவில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசபக்தி பேரணியில் திரண்டிருந்தா ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையிலேயே புடின் இவ்வாறு பேசியுள்ளார்.
@reuters
நமது நிலம், நமது மக்களுக்கு உரிமையான நிலம், அதை மீட்கவே நமது ராணுவம் உக்ரைனில் போராடி வருகிறது என்றார். மாஸ்கோவில் உள்ள Luzhniki அரங்கத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசிய புடின்,
உக்ரைனில் போரிடும் நமது ராணுவத்தினர் மிகவும் வீரத்துடனும் ஆவேசத்துடனும், நமது நாட்டுக்காக போரிடுகிறார்கள், அவர்களின் வீரத்தை வணங்குகிறேன், அவர்களின் துணிவைக் கண்டு பெருமை கொள்கிறேன் என்றார்.
புடினின் ஆவேச உரைக்கு ஆதரவு
-15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், ஒன்று திரண்டிருந்த மக்கள் ரஷ்ய தேசியக் கொடியை அசைத்து, புடினின் ஆவேச உரைக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
@getty
இந்த நிகழ்ச்சியில், உக்ரைனின் டான்பாஸ், மரியுபோல் ஆகிய பகுதிகளில் இருந்து சிறார்களை மேடையேற்றி ரஷ்யாவுக்கு ஆதரவாக முழக்கமிட வைத்துள்ளனர். முன்னதாக, போரில் தங்கள் வசம் சிக்கியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சிறார்களை ரஷ்யா கடத்திச் செல்வதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியிருந்தது.
ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனவும், அப்படியான ஒரு நிலை இதுவரை ஏற்பட்டதில்லை எனவும் ரஷ்யா மறுத்து வந்துள்ளது.
மேலும், சட்டத்திற்கு உட்பட்டு, சிறார்களை தத்தெடுத்துள்ளதாகவே ரஷ்யா கூறி வருகிறது.