உக்ரைன் போருக்கு தமிழக மாணவரை அனுப்பும் ரஷ்யா - மகனை மீட்டு தருமாறு கதறும் பெற்றோர்
ரஷ்யா தன்னை உக்ரைன் போருக்கு கட்டாயப்படுத்தி அனுப்புவதாக அங்குள்ள தமிழக மாணவர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில், உயர்கல்விக்காக 20,000க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
ரஷ்யாவில் தமிழக மாணவர்
இதே போல், கடந்த 2021 ஆம் ஆண்டு கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை சரவணன் மகன் கிஷோர், மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார்.
அங்கு சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த நித்திஷ், மற்றும் 3 ரஷ்ய மாணவர்களுடன் அறையில் தங்கி உள்ளார். படிப்பு செலவிற்காக நண்பர்களுடன் சேர்ந்து, கூரியர் நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், வாடிக்கையாளர்களிடம் பொருட்களை டெலிவரி செய்யும் போது அதில் ரஷ்ய நாட்டில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்ததாக கூறி, ரஷ்ய காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உக்ரைன் போர்
இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஜாமீன் பெற முயற்சித்து வருகின்றனர். 3 ரஷ்யா மாணவர்கள் விடுவிக்கப்பட்டு, தமிழகத்தை சேர்ந்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது பெற்றோருக்கு ஆடியோ அனுப்பிய கிஷோர், தங்களை சிறையில் சித்திரவதை செய்வதாகவும், மேலும் போர்முனைக்கு அனுப்ப கட்டாயப்படுத்தி ஆவணங்களில் கையெழுத்து பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ஆடியோவில் தன்னை போருக்கு வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்வதாக படபடப்புடன் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அச்சமடைந்துள்ள அவரது பெற்றோர், தனது மகனை தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு, இந்திய துாதரகம் மூலம் மகனை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |