கதிரியக்க சுனாமிகளை ஏற்படுத்தும் மிக ஆபத்தான நீர்மூழ்கிக் கப்பல்: ரஷ்யா அதிரடி
ரஷ்ய கடற்படையின் மிக ஆபத்தான, கதிரியக்க சுனாமிகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த கப்பலில் பள்ளிப் பேருந்தின் அளவு கொண்ட அணு ஆயுத டார்பிடோக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், மிக ஆபத்தான கதிரியக்க சுனாமிகளை அதனால் ஏற்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.
184 மீற்றர் நீளம் கொண்ட குறித்த நவீன நீர்மூழ்கிக் கப்பலானது கடந்த 30 ஆண்டுகளாக ரஷ்யா தீவிர சிரத்தையுடன் தயார்படுத்தி வந்துள்ளது. குறித்த கப்பலில் 80 அடி நீளம் கொண்ட 6 போஸிடான் அணு ஆயுத டார்பிடோக்களை எடுத்துச் செல்லலாம்.
இந்த டார்பிடோக்களால் தாக்கப்பட்டால் 500 மீற்றர் உயரம் வரையில் சுனாமி அலைகளை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது. போஸிடான் டார்பிடோக்களானது பொதுவாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை நகரங்களை அழிக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பல காலத்திற்கு அந்த நகரம் பொருளாதரம் அல்லது வேறு எந்த நடவடிக்கையும் இன்றி சிதைவுறும். மேலும் இந்த ஆயுதம் ஆயிரக்கணக்கான மைல் தூரம் தாக்கும் திறன் கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது.
விளாடிமிர் புடினின் கனவுத்திட்டமான இந்த நீர்மூழ்கிக் கப்பலானது Severodvinsk இல் உள்ள Sevmash கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு கடலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட இந்த கப்பலானது, தற்போது ரஷ்ய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.