கருங்கடலில் போர் பதற்றம்; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ரஷ்யா
கருங்கடல் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா அதன் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் வடமேற்கில் உள்ள பிளெசெட்ஸ்க் காஸ்மோட்ரோம் (Plesetsk Cosmodrome) விண்வெளி மையத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) சமீபத்தில் சோதனை செய்ததாக செய்தி நிறுவன அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை உள்நாட்டில் மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் தெர்மல் டெக்னாலஜி (MITT) உருவாக்கியது என்று அரசுக்கு சொந்தமான TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் அமெரிக்கா மற்ற நாடுகளுடன் இணைந்து கருங்கடலில் தங்கள் கூட்டு கடற்படை பயிற்சிகளை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
"சீ ப்ரீஸ்" (Sea Breeze 2021) என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் அமேரிக்கா, உக்ரைன் மற்றும் NATO நாடுகள் என 30 நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட துருப்புக்கள் ஈடுபட்டுள்ளன. திங்கட்கிழமை தொடங்கிய இந்த பயிற்சி இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.