வாக்னர் என்ற கொலைகார குழு... யார் இவர்கள்? மொத்தம் எத்தனை பேர்: விரிவான தகவல்
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த குழுவின் தோற்றம் முதலான பின்னணி வெளியாகியுள்ளது.
விமான விபத்தில் கொல்லப்பட்ட பிரிகோஜின்
வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர்கள் ரஷ்யாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விமானம் ரஷ்ய ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், விமானத்தில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
@reuters
இந்த நிலையில், வாக்னர் கூலிப்படை என்பவர்கள் யார்? எத்தனை வீரர்கள் இதில் செயல்பட்டு வருகிறார்கள், எந்த நாடுகளில் இவர்களின் செயல்பாடுகள் உள்ளன என்பது குறித்த விரிவான தகவல் வெளியாகியுள்ளது.
2014ல் வாக்னர் கூலிப்படையை நிறுவியதாக அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ஒருமுறை கூறியிருந்தார். செல்வந்தரான தொழிலதிபர் என்பதுடன், விளாடிமிர் புடினின் கிரெம்ளினுக்கு உணவு வழங்கும் பணியை முன்னெடுக்கும் உரிமை பெற்றதால், முதன்மை சமையற்கலைஞர் எனவும் அறியப்பட்டார்.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவிய வாக்னர் கூலிப்படை 2014ல் ரஷ்யாவுடன் கிரிமியா பகுதியை இணைக்க பேருதவி புரிந்தது. வாக்னர் கூலிப்படையானது தற்போது ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
@reuters
வீரர்களின் எண்ணிக்கை 25,000
உக்ரைன் போர் துவங்கும் முன்னர் வாக்னர் கூலிப்படையில் மொத்தம் 5,000 வீரர்கள் செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையில் பெரும்பாலான வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றே கூறப்படுகிறது.
உக்ரைன் போர் துவங்கிய பின்னர் வாக்னர் கூலிப்படையில் வீரர்களின் எண்ணிக்கை 25,000 என உயர்ந்ததாக எவ்ஜெனி பிரிகோஜின் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார். ரஷ்யாவில் கூலிப்படை என்ற அமைப்பு சட்டவிரோதமாக கருதப்பட்டாலும், 2022ல் தனியார் ராணுவ அமைப்பு என வாக்னர் கூலிப்படை பதிவு செய்யப்பட்டுள்ளது.
@bbc
உக்ரைன் போர் துவங்கிய பின்னர் ரஷ்ய சிறைகளில் இருந்து 49,000 குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி தலா 1,000 டொலர் ஊதியத்தில் வாக்னர் கூலிப்படை போருக்கு களமிறக்கியது. இதில் சுமார் 20,000 பேர்கள் மட்டுமே தற்போது ரஷ்யாவுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இதில் பலர் கொடூர குற்றவாளிகள் என்றே கூறப்படுகிறது.
சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகளில் உள்ள தங்க சுரங்கங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு வாக்னர் கூலிப்படையினரை ஒப்பந்தம் செய்துள்ளனர். மட்டுமின்றி, மாலி மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அரசாங்கங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க வாக்னர் கூலிப்படையினரை பயன்படுத்தி வருகின்றனர்.
2015ல் இருந்தே சிரியாவில் வாக்னர் கூலிப்படையினர் இயங்கி வருகின்றனர். 2023 மே மாதம் வரையில் ஓராண்டு காலம் சுமார் 1 பில்லியன் டொலர் வரையில் ரஷ்ய அரசாங்கம் வாக்னர் கூலிப்படைக்கு உதவியதாக ஜனாதிபதி புடினே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இது மட்டுமின்றி வாக்னர் கூலிப்படைக்கு சொந்தமாக தங்க, வைர சுரங்கம் இருப்பதாகவும் சிரியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிலிலும் வாக்னர் கூலிப்படை ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |