அடித்தது பேரதிஷ்டம்! ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகிய தூய்மை பணியாளர்கள்
கேரளாவில், 11 தூய்மை பணியாளர்களுக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பம்பர் பரிசு அடித்து ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
டீ குடிக்கும் நேரத்தில் லாட்டரி சீட்டு வாங்கிய பெண்கள்
இந்திய மாநிலம் கேரளாவில் லாட்டரி சீட்டுகளுக்கு அனுமதி அளித்து, அரசே லாட்டரி துறை ஒன்றையும் நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், சிக்கிம், பஞ்சாப், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் லாட்டரி சீட்டு முறை நடைமுறையில் தான் உள்ளது. லாட்டரியால் ஒரே நாளில் திடீர் கோடீஸ்வரர்களாவதை நாம் பார்த்திருக்கிறோம்.
அந்தவகையில், கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரப்பனங்கடி பகுதியைச் சேர்ந்த 11 தூய்மை பணியாளர்களுக்கு தான் லாட்டரி அடித்துள்ளது. இவர்கள், மக்காத குப்பைகளை பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் Haritha Karma sena குழுவை சேர்ந்தவர்கள்.
இவர்கள், வேலைக்கு நடுவில் டீ குடிக்கும் போது தான் லாட்டரி சீட்டு வாங்கும் எண்ணம் வந்துள்ளது. ஆள் ஆளுக்கு காசை பகிர்ந்து லாட்டரி சீட்டு வாங்கியுள்ளனர். அப்போது, கடைசியில் 12.50 ரூபாய் குறைந்துள்ளது. அதனால், 11-வதாக ஒரு ஆளை சேர்த்து வாங்கியுள்ளனர்.
இவர்கள், 4-வது முறையாக லாட்டரி சீட்டு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிடைத்தது ஜாக்பாட்
இந்நிலையில், லாட்டரி துறை பரிசு விழுந்த எண்ணை அறிவித்த மறுநாள் தான் வெற்றி பெற்றவர்களின் விவரம் வெளிவரும்.
அந்தவகையில், 11 தூய்மை பணியாளர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு தான் பம்பர் பரிசாக ரூ.10 கோடி அடித்துள்ளது. இந்த பணத்தை 11 பேரும் சமமாக பகிர்ந்து கொண்டனர்.
அதே நேரத்தில் தூய்மை பணியாளர் ஒருவர் கூறும் போது, "நாங்கள் 9 பேர் சேர்ந்து தான் இந்த லாட்டரியை வாங்க திட்டமிட்டோம். ஆனால், பணம் பற்றாக்குறையால் ஆள் சேர்த்து 11 பேர் சேர்ந்து இந்த மழைக்கால பம்பர் லாட்டரியை வாங்கினோம். இந்த பரிசு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
ஒரே இரவில் ஏழ்மை நிலையிலிருந்து கோடீஸ்வரர்களாக மாறிய தூய்மை பணியாளர்களின் சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |