50 வருட கபாலா முறையை நீக்கிய சவுதி அரேபியா - மகிழ்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள்
50 வருட கபாலா முறையை சவுதி அரேபியா நீக்கியது புலம்பெயர் தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக சவுதி அரேபியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 42%பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவார்கள். அதாவது சுமார் 13.4 மில்லியன் பேர். இதில் 2.6 மில்லியன் பேர் இந்தியர்கள் ஆவார்கள்.
முடிவுக்கு வந்த கபாலா
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய அறிவிப்பு ஒன்றை சவுதி அரேபியா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இளவரசர் முகமது பின் சல்மான் தொலைநோக்கு திட்டம் 2030 என்ற பெயரில் நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி, 50 ஆண்டுகாலமாக இருந்த கபாலா நடைமுறையை(Kafala System) முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.
ஸ்பான்ஸர்(Sponser) என்பதன் அரபு சொல்லே கபாலா ஆகும். 1950 ஆம் ஆண்டு கபாலா முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த முறை மூலம், சவுதி அரேபியாவிற்கு வரும் தொழிலாளர்களின் விசா, தங்குமிடம், வேலை மாற்றம் ஆகியவற்றை ஸ்பான்சர் செய்யும் முதலாளி கட்டுப்படுத்துகிறார். முதலாளியின் அனுமதி இல்லாமல், தொழிலாளர்கள் வேறு வேலைக்கு செல்வதோ, நாட்டை விட்டு செல்வதோ முடியாது.
இந்த நடைமுறை மூலம், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாக நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த கபாலா நடைமுறை நீக்கப்பட்டுள்ளதன் மூலம், ஊழியர்கள் வேலையை மாற்றுவது மற்றும் சொந்த நாட்டிற்கு செல்வது குறித்து அவர்களே முடிவெடுக்கலாம்.
சவுதி அரேபியாவின் இந்த முடிவை இந்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |