அட்லாண்டிக் கடலில் மாயமாகிய நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி ஆரம்பம்
அட்லாண்டிக் கடலில் மாயமாகிய நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகளை அமெரிக்கா மற்றும் கனடா இன்று ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மாயமான நீர் மூழ்கிக் கப்பல்
டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சென்ற நீர் மூழ்கிக் கப்பலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடலில் மாயமாகியுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த கப்பலில் பிரித்தானிய கோடீஸ்வரர் உள்ளிட்ட ஐந்து பேர் பயணித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கடலுக்குள் சென்று 1 மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு பின்னர் குறித்த கப்பல் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த அனைவரையும் மீட்கும் பணிகள் குறித்த நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் நிறுவனத்தால் அன்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை அது தொடர்பான எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் தேடும் பணி ஆரம்பம்
நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்களுக்கு நான்கு நாட்கள் மாத்திரம் பயன்படுத்தக்கூடிய ஒட்சிசன் கப்பலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இன்று தமது சார்பான மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளது.
இராணுவ விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சோனார் மிதவைகள் ஆகியவை மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |