இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு அரசாணை
செந்தில் பாலாஜி தமிழகத்தின் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரையை நிராகரிக்கும் ஆளுநர்
தமிழகத்தின் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை தொடர்ந்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் நிர்வகித்து வந்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதலாக மாற்ற கோரியும், மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பிய கோரிக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டார்.
ஆளுநர் ரவியின் இந்த செயல் தமிழகம் முழுவதும் பெரிதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகளை தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு மாற்ற முதல்வர் அனுப்பிய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் குற்ற வழக்கில் சிக்கி இருப்பதால் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சர்
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வரின் அதிகாரங்களுக்கு உட்பட விஷயங்களை ஆளுநர் தடுக்க முடியாது என ஆளுநருக்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசு தனது அரசாணை மூலம் தனது உறுதியான முடிவை வெளிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |