எலும்பும் தோலுமாக இருக்கும் உக்ரேனிய ராணுவ வீரர்! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சிப் புகைப்படம்
இணையத்தில் வைரலாகும் மிகாயிலோ டியானோவ்வின் புகைப்படங்கள்
ரஷ்யாவிடம் கைதியாக பிடிபட்டவர்களில் மற்றவர்களின் நிலைக்கு மாற்றாக இவர் உயிர் பிழைத்துள்ளார் - உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம்
உக்ரேனிய ராணுவ வீரர் ஒருவர் ரஷ்ய படையினரிடம் சிக்கி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்ய படையினர் விடுவித்த உக்ரேனிய வீரர்களில் மிகாயிலோ டியானோவ் என்ற வீரர் தேகம் மெலிந்து மோசமான நிலையில் காணப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மரியுபோல் முற்றுகையின்போது உக்ரேனிய வீரரான டியானோவ் ரஷ்ய படையினரிடம் பிடிபட்டார். ரஷ்யாவிலிருந்து மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையைப் பாதுகாக்கப் போராடிய 2,000 வீரர்களில் டியானோவும் ஒருவர்.
Photo: Dmytro Kozatskyi
அறிக்கைகளின்படி, ரஷ்ய சிறை முகாம்களில் நான்கு மாத கால சித்திரவதைகளை டியானோவ் எதிர்கொண்டுள்ளார். இதனால் அவரது கைகள் மற்றும் முகம் ஆகியவற்றில் தழும்புகள், காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் மிகவும் பரிதாபகரமான தோற்றத்தில் உடல் மெலிந்து இருக்கிறார்.
சமீபத்தில் ரஷ்யா சிறைக் கைதிகளாக வைத்திருந்த 205 உக்ரேனிய வீரர்களை விடுவித்தது. அதில் டியானோவும் இடம்பெற்றிருந்தார். அவர் பிடிபடுவதற்கு முன்பும் விடுவிக்கப்பட்ட பின்பும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு ரஷ்ய படையின் கொடூரத்தை சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், 'உக்ரைன் வீரர் மிகாயிலோ டியானோவ் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களில் ஒருவர். ரஷ்யாவிடம் கைதியாக பிடிபட்டவர்களில் மற்றவர்களின் நிலைக்கு மாற்றாக இவர் உயிர் பிழைத்துள்ளார். இதுவே ஜெனீவா ஒப்பந்தத்தின்படி ரஷ்யா எப்படி நடந்துகொள்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகாயிலோ டியானோவ் கீவ் ராணுவ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் மனரீதியாக வலிமையாக உள்ளதாகவும், தூய காற்றை சுவாசிப்பதாக அவர் கூறியதாகவும் டியானோவ்வின் சகோதரி தெரிவித்துள்ளார். மேலும், மிகாயிலோ டியானோவ்வின் சிகிச்சைக்காக நிதி உதவி திரட்டும் முயற்சியில் அவரது சகோதரி மற்றும் மகள் ஈடுபட்டு வருகின்றனர்.