அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: குற்றவாளி சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் கென்டகி தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்டக்கி தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு
கென்டக்கி மாகாணத்தின் லெக்சிங்டனில் உள்ள ரிச்மண்ட் ரோடு பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு ஆண்கள் காயமடைந்தனர்.
ஒரு மாநில காவல்துறை அதிகாரியை சுட்டதில் தொடங்கிய இந்த துயரச் சம்பவம், சந்தேக நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றதோடு முடிவுக்கு வந்தது.
லெக்சிங்டன் காவல்துறைத் தலைவர் லாரன்ஸ் வெதர்ஸ் தெரிவித்தபடி, தேவாலயத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். காயமடைந்த இரண்டு ஆண்களில் ஒருவர் கவலைக்கிடமாகவும், மற்றொருவர் சீராகவும் உள்ளனர்.
வாகனத்தின் நம்பர் பிளேட் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு சந்தேக நபரை, லெக்சிங்டன் விமான நிலையத்திற்கு அருகே ஒரு மாநில காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்தினார். அப்போது, சந்தேக நபர் அந்த அதிகாரியை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த காவல்துறை அதிகாரி தற்போது மருத்துவமனையில் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறை அதிகாரியை சுட்ட பிறகு, துப்பாக்கிதாரி ஒரு வாகனத்தை திருடி, சுமார் 16 மைல் (26 கி.மீ) தூரம் பயணித்து ரிச்மண்ட் ரோடு பாப்டிஸ்ட் தேவாலயத்திற்கு வந்துள்ளார். அங்கே அவர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த துயரமான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், துப்பாக்கி வன்முறையின் மோசமான தாக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |