நடுவானில் பயங்கரமாக குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானம்... மரணமடைந்த பிரித்தானியரின் பின்னணி
நடுவானில் பயங்கரமாக குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் பிரித்தானிய பயணி ஒருவர் மரணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்து, அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரமாக குலுங்கிய விமானம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 229 பேர்களுடன் பர்மாவின் மேற்கு கடற்பகுதியில் பயணிக்கும் போது திடீரென்று பயங்கரமாக குலுங்கியதுடன், வெறும் 6 நிமிடத்தில் சுமார் 7,000 அடி அளவுக்கு கீழிறங்கியுள்ளது.
இச்சம்பவத்தில் பலர் காயங்களுடன் தப்பிய நிலையில், 73 வயதான பிரித்தானியர் Geoffrey Ralph Kitchen என்பவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். நடுவானிலேயே அவர் மரணமடைந்துள்ள நிலையில், அந்த விமானம் அவசரமாக தாய்லாந்தில் தரையிறக்கப்பட்டது.
மொத்தம் 71 பயணிகள் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 7 பேர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு மேல் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்ட விமானம், தரையிறங்கும் 2 மணி நேரத்திற்கு முன்னர் பயங்கரமாக குலுங்கியுள்ளது.
இதனையடுத்து பாங்காக்கிற்கு திசை திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பயணிகள் பலரின் தலை விமானத்தின் மேற்பரப்பில் மோதியுள்ளது. இதனால் பலரும் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மரணமடைந்த பிரித்தானியரின் மனைவி
மரணமடைந்த பிரித்தானியரின் மனைவியும் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். பயணிகள் பலரால் நடக்க முடியாமல் போனதுடன், விமானத்தில் இருந்து சிறப்பு குழுவினரால் மீட்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சிலர் லேசான காயங்களுடன் தப்பியதால், அவர்கள் முதலுதவிக்கு பின்னர் சிங்கப்பூருக்கு திரும்ப தயாரானதாக கூறப்படுகிறது. குறித்த விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர்.
விமானம் தரையிறங்கிய உடனேயே, பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்தை அடைந்தன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |