இனி 37 மணிநேரம் மட்டுமே வேலை... பொருளாதாரத்தில் மிக வேகமாக வளரும் நாடொன்று முடிவு
ஸ்பெயினின் இடதுசாரி அரசாங்கம் செவ்வாயன்று வேலை வாரத்தை 37.5 மணி நேரமாகக் குறைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இடதுசாரி அரசாங்கம் உறுதி
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றான ஸ்பெயின் நாடு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை பாராளுமன்றத்தில் ஒரு கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ளும் என்றே நம்பப்படுகிறது.
மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சியை இந்த நகர்வு தடுக்கும் என்றும் வணிகத் தலைவர்கள் பலர் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் சம்பள இழப்பு இல்லாமல் வேலை வாரத்தை 40 மணி நேரத்திலிருந்து 37.5 மணி நேரமாகக் குறைக்க இடதுசாரி அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
தீவிர இடதுசாரிக் கட்சியான சுமாருடன் 2023ல் முன்னெடுத்த கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. மேலும், ஒரு வருடத்திற்கும் மேலான அரசியல் சர்ச்சைக்குப் பிறகு ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது,
சில்லறை விற்பனை, விருந்தோம்பல் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 12 மில்லியன் தொழிலாளர்களைப் பாதிக்கும் என்றே கூறப்படுகிறது. ஸ்பெயினில் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே 37.5 மணி நேர வேலை வாரத்தைக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த திட்டமானது ஸ்பெயினை நவீனமயமாக்கும் என்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்றும் தொழிலாளர் அமைச்சர் யோலண்டா டயஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தமானது நாட்டின் வணிகத் தலைவர்களின் பிரதிநிதிகள் இல்லாமல். கடந்த ஆண்டு ஸ்பெயினின் இரண்டு முக்கிய தொழிற்சங்கங்களுடன் கையெழுத்திடப்பட்டது.
தீங்கு விளைவிக்கும்
நீண்ட 11 மாதங்கள் பேச்சுவார்த்தைகளின் முடிவில் வணிகத் தலைவர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறினர். மேலும், ஜனவரி மாதத்தில் வேலையின்மை சதவிகிதம் அதிகரித்த நிலையில், ஸ்பெயினின் தொழிலாளர் சந்தை ஏற்கனவே பலவீனமான அறிகுறிகளைக் காட்டி வருவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சீர்திருத்தம் சில துறைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் முறையிட்டுள்ளனர். இந்த நிலையில், தொடர்புடைய பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அதே கருத்துடைய கட்சியினரைக் கண்டுபிடிக்கும் கடினமான பணியை அரசாங்கம் எதிர்கொள்கிறது.
குறிப்பாக இரண்டு முக்கிய வணிக சார்பு கட்டலான் மற்றும் பாஸ்க் பிரிவினைவாதக் கட்சிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள நிலையில் ஸ்பெயின் 3.2 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |