ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகம்! டிஜிட்டல் அடிமையாதலை தடுக்க ஸ்பெயின் புதிய முயற்சி
ஸ்மார்ட்போனுக்கு அடிமையாதல் என்ற தீவிர பிரச்சனையை கருத்தில் கொண்டு ஸ்பெயின் அரசு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஸ்பெயின் அரசின் புதிய முயற்சி
ஸ்மார்ட்போன் அடிமையாதல் இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இதன் தீவிரத்தை உணர்ந்த ஸ்பெயின் அரசு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதாவது, ஸ்பெயின் அரசு, தனது நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் உடல்நல எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்ய முடிவு செய்துள்ளது.
இது சிகரெட் பாக்கெட்டுகளில் காணப்படும் எச்சரிக்கை வாசகத்தை போன்றதே. இந்த முடிவு, ஸ்மார்ட்போன் அடிமையாதலால் ஏற்படும் உடல்நலம், மனநலம் மற்றும் சமூக உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கமாக கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள்
பல்வேறு ஆய்வுகள் ஸ்மார்ட்போன் அடிமையாதல் தூக்கக் குறைவு, மன அழுத்தம், உறவுகளில் விரிசல் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதை நிரூபித்துள்ளது.
டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் அதிகப்படியான ஈடுபாடு அவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே, குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.
பல நாடுகள் டிஜிட்டல் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஸ்பெயினின் இந்த முடிவு முக்கியமான ஒரு முன்னோடி முயற்சியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |