இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களின் நினைவை போற்றி சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் 200 ஆண்டுகால நினைவை போற்றி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட உள்ளது.
சிறப்பு அஞ்சல் தலை
சிறப்பு அஞ்சல் தலை தொடர்பாக பாஜக தலைமை வெளியிட்ட செய்தி குறிப்பில், "இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் 200 ஆண்டுகால நினைவை போற்றும் வகையில் இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலையை இன்று (டிச.30) வெளியிட உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே உள்ள வரலாற்றை பெருமைப்படுத்தும் நிகழ்வு டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுகிறார்.
பின்னர், அதனை இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொள்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு..
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட செய்தி குறிப்பில், "கடந்த 2014 -ம் ஆண்டு முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
அவர்களுக்கு 14,000 வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை இந்திய அரசு செய்து கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கடந்த 2022 -ம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போது 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் இந்திய அரசு உதவிகளை செய்தது.
இந்நிலையில், இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் 200 ஆண்டுகால நினைவை போற்றும் வகையில் இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட உள்ளது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |